
கல்வியே அழகு
கல்லூரியின் அதிபர் அவர்களுக்கும், பிரதி அதிபர் அவர்களுக்கும், என் சக ஆசிரியர்களுக்கும், மற்றும் மாணவச் செல்வங்களுக்கும் காலை வணக்கம். இன்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்ற காரியம் அழகு. ஆகவே அந்த அழகைப் பற்றிய சிறிய ஆலோசனையை உங்களுக்கு வழங்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.
நமக்கு எல்லாருக்குமே தெரியும் இந்த உலகம் நிரந்தரம் இல்லை இந்த உலகம் நிரந்தரம் இல்லை என்று சொல்லுகின்ற நானும் நிரந்தரம் இல்லாதவன் நான் மட்மென்றால் இல்லை ஒட்டுமொத்த மனித குலமும் நிரந்தரம் இல்லாதவர்கள். எனவே நாம் இந்த உலகத்திலே வாழும் போது சில காரியங்கள் நிரந்தரம் என்று நினைத்து நேரத்தையும் செலவழிக்கும் பழக்கத்தை வழக்கத்திலே கொண்டவர்களாய் இருக்கின்றோம். அது எந்த அளவுக்கு என்றால் ஒரு வீட்டை கட்டினால் அதை அழகுபடுத்துவது, ஒரு வாகனத்தை வாங்கினால் அதை அலங்கரிப்பது அல்லது நமது தோற்றத்தை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக அதிக முக்கியத்துவத்தையும் கொடுக்கிறவர்களாய் இருக்கிறோம். ஆனால் நமது முன்னோர்களில் ஒருவரான நாலடியார் தமது பாடலில் இவ்விதமாய் குறிப்பிட்டுள்ளார்.
"குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்தில் நல்லம் யாம் எனும் நடுநிலைமையாற் கல்வி அழகே அழகு."
அதாவது இதனை நமது மொழியில் கூறுவோமாகில் ஒருவருக்கு மஞ்சள் பூச்சியால் உண்டாகும் அழகைப் பார்க்கிலும் அல்லது நீண்ட முடியை வளர்ப்பதினால் உண்டாக்கும் அழகைப் பார்க்கிலும் நன்மைகளையும், தீமைகளையும் நல்லவைகளையும், கெட்டவைகளையும், சரியானவைகளையும், பிழையானவைகளையும் உண்டாக்கும் ஒழுக்கமானவைகளையும், ஒழுக்கம் மற்றவைகளையும் பிரித்து பகுத்து ஆராய கூடிய அறிவைத் தருகின்ற கல்வியழகே சிறந்த அழகாகும்.
எனவே மாணவர்களாகிய நீங்களும் ஆசிரியர்களாகிய நாங்களும் மஞ்சள் பூச்சு, பச்சை பூச்சு, பஞ்சவர்ண பூச்சு, பூச்சின் பெயரே தெரியாத பூச்சு இவைகளினால் எம்மை அழகு படுத்தினாலும் இந்த உலகில் நாம் இருக்கும் வரை நமது வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கின்ற கல்வி என்ற பூச்சினாலும் நம்மை அலங்கரிக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.